ஓட்டுநரின் செயலால் உயிர் பிழைத்த பயணிகள் - பதைபதைக்கும் சம்பவம்
கும்பகோணத்திலிருந்து அரியலூர் சென்ற தனியார் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாகவே டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் என அனைத்து பகுதிகளையும் வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்த நிலையில் கும்பகோணம் பேருந்துநிலையத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரியலூருக்கு சென்ற தனியார் பேருந்து ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனை உணர்ந்த அந்த ஓட்டுநர், சாதுர்யமாக அருகில் இருந்த வயலுக்குள் பேருந்தை இறக்கி பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். இதனை அந்த வழியில் சென்று கொண்டிருந்த அரசு தலைமை கொறடாவான கோவி.செழியன் கண்டு பதறியடித்து பேருந்தில் இருந்த பயணிகளை போலீசாரின் உதவியுடன் பத்திரமாக மீட்டுள்ளார்.
மேலும் காயம் அடைந்த பயணிகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.