மதுபோதையில் அண்ணனின் கழுத்தை அறுத்த தம்பி - கன்னியாகுமரியில் நடந்த பயங்கரம்
கன்னியாகுமரியில் மது போதையில் அண்ணனின் கழுத்தை கத்தியால் அறுத்த தம்பியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே அணஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த ஜெயசிங் என்பவருக்கு ராஜேஷ் என்ற தம்பி உள்ளார். இவர்களது தந்தை இறந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருக்கும் தாயாருக்கு வேண்டிய வேலைகள் அனைத்தையும் ராஜேஷ் செய்து வைத்துவிட்டு கருங்கல் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
ஆனால் அண்ணன் ஜெயசிங் வேலைக்கு ஏதும் செல்லாமல் அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டில் ராஜேஷ் சமைத்து வைத்திருக்கும் உணவுகளை சாப்பிட்டு ஊதாரித்தனமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுசம்பந்தமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனிடையே நேற்று இரவு ஜெயசிங் மற்றும் ராஜேஷ் இருவரும் மது குடித்துவிட்டு வந்து மாறி மாறி தாக்கி கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஆவேசமடைந்த ராஜேஷ் அருகில் கிடந்த கத்தியை எடுத்து ஜெயசிங்கின் கழுத்தில் வெட்டி உள்ளார் இதில் ஜெயசிங்கிற்கு பலத்த காயம் ஏற்பட்டு கீழே சரிந்து விழுந்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஜெயசிங்கை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.இது சம்பந்தமாக ஜெயசிங் அளித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.