2வது திருமணம் செஞ்சது தப்புதான் சாமி : இது குமாரசாமி சொன்னது
2வது திருமணம் செய்ததன் மூலம் தான் வாழ்க்கையில் தவறு செய்துவிட்டதாக முன்னாள் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் சிந்தகி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில்ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது என்னை பற்றியும், எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பா.ஜனதா விமர்சனம் செய்கிறது. எனது அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை திறந்த புத்தகத்தை போன்றது. நான் எதையும் மூடிமறைக்கவில்லை.பாஜக தலைவர் நளின்குமார் கட்டீலை பற்றி கூற முடியும். அவரால் அநீதிக்கு ஆளானவர்கள் குறித்தும் என்னால் பேச முடியும். தயவு செய்து என்னை யாரும் கிளற வேண்டாம்.
எனக்கு 2 மனைவிகள் குறித்து பாஜகவினர் கேள்வி எழுப்புகிறார்கள். 2-வது திருமணம் செய்து நான் வாழ்க்கையில் தவறு செய்தேன். அந்த தவறை நான் திருத்தி கொண்டேன். இதை நான் விதான சவுதாவிலும் கூறினேன். என்னை பற்றிய விஷயங்களை பகிரங்கப்படுத்துவதாக பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். அவ்வாறு ஏதாவது ரகசிய தகவல்கள் இருந்தால் அதை வெளிப்படுத்தட்டும். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பாஜகவினர் விமர்சிப்பது சரியல்ல.
அனைவரது வாழ்க்கையிலும் ரகசியங்கள் உள்ளன. அதுபற்றி பேச ஆரம்பித்தால் அவர்களை விட 10 மடங்கு தகவல்களை வெளியிட முடியும். வளர்ச்சி குறித்து விவாதங்கள், விமர்சனங்கள் எழுப்பலாம். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்க வேண்டாம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய நிர்வாகிகளின் குடும்பத்தில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பாஜகவினரின் விஷயங்களை ஒவ்வொன்றாக கூறினால், அவர்களின் நிலை வீதிக்கு வரும்.
எங்கள் கட்சியின் வளர்ச்சியை 2 தேசிய கட்சிகளாலும் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனது வாழ்க்கையில் சில மோசமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதை நான் மூடிமறைக்கவில்லை. திசை மாறி சென்று, பிறகு மீண்டும் சரியான பாதைக்கு திரும்பிவிட்டேன். என்னால் இந்த சமூகத்திற்கு எந்த கேடும் ஏற்படவில்லை.
ஆனால் பாஜக தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் வரலாறு உள்ளது. அதனால் அவர்கள் எச்சரிக்கையாக பேச வேண்டும். நான் யாருடனும் சமரசம் செய்து கொள்ளவில்லை. காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக போராடி வருகிறேன். தனிப்பட்ட விஷயங்களை கிளறுவதால் யாருக்கு பயன்?. நீங்கள் சேற்றை வாரி இறைப்பது போல் நானும் செய்ய முடியும். தலைவர்கள் தங்களின் பொறுப்பை அறிந்து பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.