சமூக இடைவெளியின்றி மீன் வாங்க அலைமோதிய மக்கள் - தொற்று பரவும் அபாயம்!
குளச்சல் துறைமுகத்தில் கொரோனா விதிகளை மீறி சமூக இடைவெளியின்றி மீன்களை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டத்தால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், குறும்பனை மண்டைக்காடு மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கட்டுமர, வள்ளம் மற்றும் பைபர் படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முழு ஊரடங்காலும், டவ் - தே புயல் எச்சரிக்கை காரணமாகவும் கடந்த ஒரு மாதமாக மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் இருந்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தளவுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்த நிலையில், மீனவர்கள் மீன்பிடித்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் குளச்சல் துறைமுகத்தில் சமூக இடைவெளியின்றி ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் மீன்களை வாங்க அலைமோதியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.