திமுக தான் எனது தாய் கழகம் Ku Ka Selvam
கு.க செல்வத்தின் தாய் கழகம் திமுக அல்ல
அதிமுக பாஜகாவில் இருந்து மீண்டும் திமுகவிற்கு வந்த ஆயிரம் விளக்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ கு.க செல்வம் தனது தாய் கழகத்திற்கு திரும்பியதாக பேட்டி அளித்துள்ளார்.
ஆனால் இவரது தாய் கழகம் திமுக அல்ல அதிமுக தான்! எம்ஜிஆர் அவர்களுடன் மிக நெருக்கமாக இருந்த ஜே.பி ஆரின் நம்பிக்கைக்குரிய இளைஞராக இருந்தவர் கு.க செல்வம்.
அவரின் செயல்பாடுகளின் நம்பிக்கையின் காரணமாக எம்.ஜி.ஆரிடம் அறிமுகப்படுத்தினார் ஜேபியார்.
அதன் பின் ராமவரம் தோட்டத்தில் எம்.ஜி ஆர் அவர்களின் மனைவி ஜானகி அம்மாவிற்கும் நம்பிக்கை கொண்டவராக இருந்தார்.
அதனால் அதிமுகவில் செல்வாக்கு மிகுந்த நபராக சென்னையில் வலம் வந்தார். தி.நகர் பகுதியை அரசியல் களமாக உருவாக்கி அப்போதே செயல்பட்டார்.
தி.நகர் பகுதியில் திமுக ஜெ.அன்பழகன் அரசியல் விரோதத்தோடு எதிர்கொண்டார் செல்வம். பின்னாளில் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அதிமுக இரண்டாக ஆன போது இவர் ஜானகி அம்மாவின் பின் இருந்து ஜெயலலிதாவை எதிர்த்தார்.
அதன் பின் ஜெ-ஜா என்று இருந்த அணி ஒன்றாக இணைந்து அதிமுக பலமானது. ஆனால் செல்வம் நிராகரிக்கப்பட்டார். அதன் பின் தனக்கான அரசியல் பலம் தொழிலுக்கும் தேவை என்பதால் திமுக பக்கம் நகர்ந்தார்.
திமுகவில் இவரின் அப்போதைய அரசியல் முரண் கொண்ட ஜெ.அன்பழகன் மாவட்ட பொறுப்பில் இருந்ததால் அந்த பொறுப்பை பெற்றிட தலைமையில் நம்பிக்கை ஏற்படுத்தினார்.
ஜெ.அன்பழகம் கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவர் என்றால் கு.க செல்வம் ஸ்டாலின் அவர்களின் நம்பிக்கைக்குரியவர் ஆனார். அவரின்கையில் உதய சூரியன் பச்சை குத்தி நம்பிக்கையை மேலும் நிலைநிறுத்தியவர் செல்வம்.
அதன் பின் ஆயிரம் விளக்கு தொகுதி யில் சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். இருந்த போதும் கட்சிக்குள் மாவட்ட பொறுப்பை பெற முடியாமல் ஜெ.அன்பழகன் பதவி வகித்தார்.
அவரது மறைவுக்கு பின் அந்த பதவி கிடைக்கும் என எதிர்பார்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த ஏமாற்றத்தினால் தமிழகத்தை வலை வீசிக்கொண்டிருந்த பாஜக விடம் சிக்கினார்.
அங்கும் அவருக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சிய வேதனையில் திமுகவில் மீண்டும் இணைந்து கட்சிப் பணியை ஆரம்பிக்க உள்ளார்.
இதற்கான செய்தியாளர் சந்திப்பின் போது திமுகவில் மீண்டும் பணி செய்ய ஆரம்பித்ததும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததும் மனதிலுள்ள பாரம் நீங்கியதாக தெரிவித்துள்ளார்.
தாய் கழகம் அதிமுக என்றாலும் எம்.எல்.ஏ வுடன் கட்சியில் தனக்கென இடம் பதித்து வேறு கட்சி சென்று வந்தாலும் அரவணைத்து ஏற்றுக்கொண்ட திமுக தான் தனது தாய் கழகம் என்று உறுதியுடனும் மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.