மேடை பேச்சுக்களால் மக்களை திசை திருப்புகிறார் பிரதமர் மோடி - கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு!

Tamil nadu Narendra Modi
By Jiyath Jan 03, 2024 09:37 AM GMT
Report

மேடை பேச்சின் மூலம் மக்கள் எதிர்கொண்டு வரும் துன்பங்களையும், துயரங்களையும் பிரதமர் மோடி திசைத் திருப்புகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்

கே.எஸ். அழகிரி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பா.ஜ.க. அரசு அமைந்த கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதும், அதை எதிர்த்து தமிழக முதலமைச்சர் குரல் கொடுப்பதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

மேடை பேச்சுக்களால் மக்களை திசை திருப்புகிறார் பிரதமர் மோடி - கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு! | Ks Alagiri Statment About Pm Modi

அதேபோல, பிரதமர் மோடி உரையாற்றும் போது உலகில் எந்த இடத்திற்கு சென்றாலும் தமிழ்நாட்டைப் பற்றி பேசாமல், தமிழ் மொழியை மனதார புகழாமல் என்னால் இருக்க முடிவதில்லை என்று மனசாட்சியே இல்லாமல் உண்மைக்கு புறம்பாக பேசியிருக்கிறார். தகவல் அறியும் உரிமைச் சட்ட தரவுகளின்படி அரசமைப்புச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 22 மொழிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பா.ஜ.க. அரசு எத்தகைய கடுமையான பாரபட்சத்தை பின்பற்றுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்திய பொருளாதாரம் 2024-ம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலராக உயர்த்திக் காட்டுவேன் என்று பெருமைபட பேசியிருக்கிறார். இந்தியா வளர வேண்டுமென்று விரும்புவதில் தவறில்லை. ஆனால், அதற்கான சாத்தியக் கூறுகள் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

கனவு நிறைவேறாது

2014-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.62 ஆக இருந்தது. தற்போது 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 82.71 ஆக சரிந்துள்ளது.

மேடை பேச்சுக்களால் மக்களை திசை திருப்புகிறார் பிரதமர் மோடி - கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு! | Ks Alagiri Statment About Pm Modi

இதன்படி 40 சதவிகிதம் ரூபாயின் மதிப்பு குறைந்து உள்ளது. அதுமட்டு மல்லாமல் 2023 நிலவரப்படி மத்திய பா.ஜ.க. அரசின் மொத்த கடன் 165 லட்சம் கோடி. இது மொத்த உள்நாட்டு மதிப்பில் 60 சதவிகிதம். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பதவி விலகுகிற போது மொத்த கடன் ரூபாய் 55 லட்சம் கோடி. கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் 65 லட்சம் கோடி கடனை அதிகமாக பெற்று இந்தியாவை கடன்கார நாடாக மாற்றிய பிரதமர் மோடி, பொருளாதார பேரழிவுக்கு தான் வித்திடுகிறாரே தவிர, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

இதையெல்லாம் கண்டு கொள்ளாத பிரதமர் மோடி தமது சாதுர்யமான மேடை பேச்சின் மூலம் மக்கள் எதிர்கொண்டு வரும் துன்பங்களையும், துயரங்களையும் திசைத் திருப்பி அரசியல் ஆதாயம் தேடி விடலாம் என்று பகல் கனவு காண்கிறார். அவரது கனவு தமிழகத்தில் நிச்சயம் நிறைவேறாது" என்று தெரிவித்துள்ளார்.