ராகுல் காந்தி டீ-சர்ட் விலை என்ன ? விளக்கம் கொடுத்த கே.எஸ்.அழகிரி
ராகுல் காந்தி அணிந்திருக்கின்ற டீ-சர்ட் திருப்பூரில் தாயாரிக்கப்பட்டது , என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் ராகுல் காந்தியின் நடைபயணம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட லட்சக்கணக்கான மக்கள் அவரை வந்து சந்தித்தனர்.
குறிப்பாக பெண்கள் வரிசை வரிசையாக, அலைஅலையாக வந்து பார்த்தனர். ராகுல் காந்தியின் எளிமையான தோற்றம் அவர்களை கவர்ந்து உள்ளது. அவர் சொல்லுகின்ற கருத்தாழமிக்க கருத்துக்கள் அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது.

இது சமுதாயத்தை சீரமைப்பதற்கான நடைபயணம். சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான நடைபயணம். வெறும் அரசியல் லாபத்திற்காக மட்டுமில்லை, இந்திய மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற நடைபயணம். ராகுல் காந்தி அணிந்திருக்கின்ற டீ-சர்ட் திருப்பூரில் தயாரிக்கப்பட்டது.
திருப்பூரில் கோல்டன் ஐஸ் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டவை. மொத்தம் 20 ஆயிரம் டீ-சர்ட்டுகள் நாங்கள் தயாரித்தோம். எங்களுடைய கட்சி தோழர்கள் அனைவரும் அந்த டீ-ஷர்ட் தான் அணிந்து உள்ளனர். தொண்டர்கள் அணிந்துள்ள டீ-சர்ட்களில் தலைவர்களின் படங்களை பொறித்து உள்ளோம். ராகுல் காந்தி அணிவதற்காக 4 டீ சர்ட், படங்கள் எதுவும் பதிவு செய்யாமல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
மோடி தான் ரூ.10 லட்ச ரூபாய் கோட்
அந்த டீ-சர்ட் ரூ. 40 ஆயிரம் அல்ல, ரூ. 4 லட்சமும் அல்ல. மோடி தான் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட் அணிகிறார். அந்த எரிச்சலில் அவர்கள் இதை விமர்சிக்கிறார்கள். ராகுல் எளிமையாக வருவதை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் சொல்கிறார்கள். அந்த விமர்சனம் தவறு. 4-வது நாள் நடைபயணத்தின் மூலம் எல்லா தரப்பு மக்களையும் ராகுல் காந்தி சந்தித்துள்ளார்.
குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், சமூக அமைப்பை சேர்ந்தவர்கள், தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் எல்லோரையும் அவர் சந்தித்துள்ளார்.
ராகுல் காந்தியை சந்தித்தவர்கள் பல கருத்துக்களை தெரிவித்துள்ளன இந்த பயணம் மாபெரும் வெற்றி பயணமாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.