'ஏலே அய்யாதுரை’ - மும்பை அணியின் செயலால் நெகிழ்ந்த ரசிகர்கள்
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி செய்த செயல் ஒன்று ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 41வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் அந்த அணி இன்னும் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி வீரர் கெயில் 5வது ஓவரை எதிர்கொண்டார். மறுமுனையில் கே.எல்.ராகுல் விளையாட க்ரூணல் பாண்ட்யா அந்த ஓவரை வீசினார்.
அப்போது கெய்ல் அடித்த ஒரு பந்து பவுலரை நோக்கி சென்றது. ஆனால் எதிர்பாராதவிதமாக ரன் ஓடுவதற்கு க்ரீசை விட்டு வெளியே செல்ல தயாரான கே.எல்.ராகுலின் பேடில் பட்டு க்ரூணல் பாண்ட்யா கையில் செல்ல அவர் ரன் அவுட் செய்து அப்பீல் கேட்டார்.
இதனால் கெய்லும், ராகுலும் திகைத்து நின்றனர். ஆனால் அடுத்த சில நொடிகளில் கேப்டன் ரோகித் சர்மா கண்ணை காட்ட, தாங்கள் ரன் அவுட் அப்பீல் கேட்டதை வாபஸ் பெறுவதாக க்ரூணல் பாண்ட்யா அம்பயரிடம் தெரிவித்தார்.
இது அதிர்ஷ்டத்தால் கிடைத்த விக்கெட்டாகும். ஆனால் எதிரணிக்கும் மதிப்பு கொடுத்து நடந்து கொண்ட மும்பை அணியின் செயல் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது.