தமிழகத்தில் அதிகளவில் மாம்பழம் உற்பத்தி செய்யும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாறு தெரியுமா..?

Tamil nadu Krishnagiri
By Karthick Aug 31, 2023 12:04 PM GMT
Report

இந்தியாவில் அதிகளவில் மாம்பழ உற்பத்தி செய்யும் கிருஷ்ணகிரியை பற்றி தெரிந்து கொள்வோம்.

கிருஷ்ணகிரி மாவட்டம்

இந்தியாவில் அதிக அளவில் மாம்பழம் உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் ஒன்றான தமிழகத்தின் 30-ஆவது மாவட்டமாக 2004-ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்திலிருந்து பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டம் 5143 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டதாகும். இம்மாவட்டத்தில் மலைகள் அதிகளவில் நிறைந்து காணப்படுகின்றன.

இம்மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் முதல் 1,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் கர்நாடக ஆந்திர எல்லையில் அமைந்துள்ளதால் இங்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.  

இம்மாவட்டத்தில் 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும், 29 உள்வட்டங்களும், 661 வருவாய் கிராமங்களும் இருக்கின்றன. அதே போல 1 மாநகராட்சி, 1 நகராட்சி, 6 பேரூராட்சி, 10 ஊராட்சி ஒன்றியங்கள், 333 ஊராட்சிகளை இம்மாவட்டம் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் கிருஷ்ணகிரி என்ற ஒரு மக்களவை தொகுதியும், ஊத்தங்கரை,கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனபள்ளி, ஓசூர், தளி என 6 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன.

வரலாறு 

கொடை வள்ளலான அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சி செய்து வந்த இடமாக இவ்விடம் இருந்துள்ளது. கிருஷ்ணகிரி சேலத்தில் சில பகுதிகள், தருமபுரி, மற்றும் மைசூர் ஆகிய இடங்கள் ஒருங்கே "தகடூர் நாடு" அல்லது "அதியமான் நாடு" எனவும் அப்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

krishnagiri-history-in-tamil

முந்தைய காலகட்டங்களில் கிருஷ்ணகிரி "எயில் நாடு" என்றும், ஓசூர் "முரசு நாடு" என்றும் ஊத்தங்கரை "கோவூர் நாடு" என்றும் அறியப்பட்டுள்ளது. போர் வீரர்களுக்கு வைக்கப்படும் "நவகண்டம்" என கூறப்படும் நடுகற்கள் இங்கு அதிகம் காணப்படுகிறது.

ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கையின் மூலம் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. அப்போது 1792 ஆம் ஆண்டு கேப்டன் அலெக்சான்டர் ரீட் மாவட்ட இப்பகுதியின் கலெக்டராக அறிவிக்கப்பட்டார். பின்னர் இப்பகுதி மெட்ராஸ் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

பொருளாதாரம்  

மாம்பழ சாகுபடியில் தமிழ்நாட்டில் முதல் இடத்தில் உள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது. சுமார் 300,17 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இங்கு மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் 300,000 டன் மாம்பழம் உற்பத்தி ஆகிறது.

அதிகளவில் உற்பத்தி இருக்கும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்நகரில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி அரசின் சார்பாக நடைபெற்று வருகிறது. மாம்பழப் பதப்படுத்தும் தொழிலும், அத்துடன் இம்மாவட்டத்தில் வளர்ந்து வருகின்றது.மாம்பழத்தை தவிர்த்து 20,687 எக்டேரில் நெல்லும், 48,944 எக்டேரில் கேழ்வரகும், இதர பயிறுவகைகள் 48,749 எக்டேரிலும், கரும்பு 4,078 எக்டேரிலும், தேங்காய் 13,192 எக்டேரிலும் பயிரிடப்படுகின்றன.

krishnagiri-history-in-tamil

கிருஷ்ணகிரியை அடுத்துள்ள ஓசூர் மாநகராட்சி ஒரு தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு சிப்காட் 1 மற்றும் 2 தொழிற்பேட்டைகள் உள்ளன. அசோக் லேலண்ட், டைட்டன், டி.வி.எசு, லட்சமி மில் போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் இந்த சிப்காட்டில் இயங்கி வருகின்றன.


கிருஷ்ணகிரி அணை  

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணை, கிருட்டிணகிரி நகரிலிருந்து 7 கி.மீ தொலைவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 1958-ஆம் ஆண்டு இந்த அணை கட்டி முடிக்கப்பட்டு அப்போதைய முதல்வரான காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணையின் கொள்ளளவு 1666 மில்லியன் கன அடியாகும்.

krishnagiri-history-in-tamil

அணை பூங்கா 

இந்த அணைப் பகுதியில் பூங்கா ஒன்றும் அமைந்துள்ளது. இதுவே கிருஷ்ணகிரியின் முக்கிய சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. கிருஷ்ணகிரி அணையின் வலதுபுறம் 45 ஏக்கரிலும், இடதுபுறம் 15 ஏக்கரிலும் மொத்தமாக 60 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது.

இந்த பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், புல்வெளிப் பகுதிகள், நீரூற்றுகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு ஒரு மான் பண்ணையும் பராமரிக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.


சந்திரசூடேஸ்வரர் கோயில், ஓசூர்   

சந்திரசூடேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் ஓசூர் பாறை மலை மீது அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். செவிடை நாயனார் என்ற தமிழ் பெயர் சந்திரசூடேஸ்வரர் என்று மருவியது. இந்த கோவிலில் 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஓய்சாள அரசன் வீரநரசிம்மனின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது 13 நூற்றாண்டிற்கு முன்பு கட்டப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது.

krishnagiri-history-in-tamil

அதே போல, இக்கோவிலை சுத்தி 12–ம் நூற்றாண்டு சோழர் கால பாறை கல்வெட்டுகள் உள்ளன.ஓசூர் சந்திரசூடேஸ்வர சாமி கோவிலில் மொத்தம் 26 தமிழ் கல்வெட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனை தொல்லியல் துறை 1974–ம் ஆண்டு பதிவு செய்துள்ளது. ராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டும், ஒய்சாள அரசர்களான வீரவிஸ்வநாதன், வீரநரசிம்மன், வீரராமநாதன் போன்ற அரசர்கள் கோவிலுக்கு வழங்கிய நிலதானங்கள் பற்றியும், கொடைகள், பூஜைக்கு வேண்டிய பொருட்கள் குறித்தும் இந்த கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.