கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் கடந்த 09.02. 2004 அன்று தருமபுரி மாவட்டத்திலிருந்து பிரித்து தமிழ்நாட்டின் 30 வது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. 5143 சதுர.கி.மீ பரப்பளவு உள்ள இந்த மாவட்டத்தில், 2,024 சதுர கி.மீ. பரப்பளவிற்கு வனபகுதிகளை கொண்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களுடனும், கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களுடனும் தனது எல்லையை பகிர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி, ஓசூர், பர்கூர், ஊத்தங்கரை(SC), தளி, வேப்பனஹள்ளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளையும் 1 மாநகராட்சியையும், 1 நகராட்சியையும், 6 பேரூராட்சிகளையும், 10 ஊராட்சி ஒன்றியங்களையும் 333 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.
சரயு ஐ.ஏ.எஸ்
கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த சரயு ஐஏஎஸ், 2015 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சிவில் இன்ஜினியரிங் படித்துள்ள இவர், 22 வயதில் தனது முதல் முயற்சியிலே சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட உதவி ஆட்சியர், கடலூர்மாவட்ட சார் ஆட்சியர், புதுக்கோட்டை மாவட்ட சார் ஆட்சியர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு லிமிடெட் இணை நிர்வாக இயக்குநர் ஆகிய பதவிகளை வகித்து வந்த இவர் 22.05.2023 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 13 வது ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
அரசு ஊழியர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகச் செயல்படும் அதிகாரிகளின் பெயர்களை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவிப்புப் பலகையில் வெளியிடும் நடைமுறையை அறிமுகப்படுத்தினார்.
பொதுவாக தனியார் பள்ளிகளே தரமானது என்ற மனப்பான்மையில் பலரும் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வரும் நிலையில், சரயு ஐஏஎஸ் தனது மகளை அரசு அங்கன்வாடியில் சேர்த்துள்ளார்.
தீபக் ஜேக்கப் ஐ.ஏ.எஸ்
கேரளா மாநிலத்தை சேர்ந்த தீபக் ஜேக்கப் ஐஏஎஸ், பொறியியல் பட்டதாரி ஆவார். கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தில் உதவி செயலாளராக தனது பணியை தொடங்கியுள்ளார்.
அதன் பின்னர், தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நிர்வாக இயக்குனர், தேர்தல் ஆணையத்தில் இணை முதன்மை அலுவலர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குனர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். அதன் பின்னர் 07.02.2023 முதல் 21.05.2023 வரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.