“திமுகவின் ஊழலை மறைக்கத்தான் என் வீட்டில் ரெய்டு” - முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் காட்டம்

press meet slams dmk kp anbazhagan income tax raid
By Swetha Subash Jan 21, 2022 11:37 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

500 கோடி ரூபாய் ஊழல் வெளியானதை மக்கள் மத்தியிலிருந்து திசை திருப்ப வேண்டும் என்கிற நோக்கத்தில் தி.மு.க எனது வீட்டில் சோதனை நடத்தியது என கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பழகன் வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் அன்பழகன் வீட்டில் காலை முதல் நடந்த சோதனை, 16 மணி நேரத்திற்கு பிறகு இரவு நிறைவுப் பெற்றது. அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டிலிருந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

"தி.மு.க.,அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்ததை எதிர்கட்சி தலைவர் பழனிசாமி வெளிகொண்டு வந்தார். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பிலும் 21 பொருட்கள் வழங்காமல் தி.மு.க.அரசு மக்களை ஏமாற்றியது.

இதில் 500 கோடி ரூபாய் ஊழல் வெளியானதை மக்கள் மத்தியிலிருந்து திசை திருப்ப வேண்டும் என்கிற நோக்கத்தில் தி.மு.க.,அரசு எனது வீட்டில் சோதனை நடத்தியது.

இரவு வரை நடந்த சோதனையில் எனது வீட்டிலிருந்து பணம், நகை, ஆவணங்கள் கைப்பற்றவில்லை என லஞ்ச ஒழிப்பு துறையினர் எழுத்து மூலமாக தெரிவித்து ஆவணங்களை வழங்கி உள்ளனர்.

ஆனால் தி.மு.க.,அரசுக்கு இணக்கமாக செயல்பட வேண்டும் என்பதற்க்காக பல தொலைக்காட்சிகள் காலை முதல் இருந்தே எனது வீட்டில் கட்டு கட்டாக பணம், நகை, ஆவணங்கள் கைப்பற்றியதாக பொய்யான தகவல் வெளியிட்டு வந்தனர்.

அந்த ஊடகங்கள் தாங்கள் செய்த தவறை திருத்தி, உண்மையான தகவலை செய்தியாக வெளியிட வேண்டும். இல்லையென்றால் இதை சட்ட ரீதியாக செல்வேன் "என தெரிவித்தார்.

மேலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரூ.2.65 கோடி கைப்பற்றியதாக அறிக்கை வெளியிட்டுள்ளதாக கேட்ட போது,

"தி.மு.க.,அரசின் கீழ் இயங்கும் லஞ்சப் ஒழிப்பு துறை அதிகாரிகள் தான் இங்கு பணம், நகை. ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என ஒப்புதல் கொடுத்துள்ளது" என கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.