கோவில்பட்டியில் ரூ.2.91 லட்சம் பறக்கும் படையினரால் பறிமுதல்
கோவில்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ரூ.2.91 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதியில் சாலைபுதூர் சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையில் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வடக்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்த மு.நல்லையா என்பவரிடம் இருந்து உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல, நெல்லை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள கூடுதல் பஸ் நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி சரத்குமார் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், நடந்து சென்று கொண்டிருந்த நாலாட்டின்புதூரைச் சேர்ந்த ராம்குமாரிடம் இருந்து உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.91 லட்சம் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான கோவில்பட்டி தாசில்தார் அமுதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.