கோவில்பட்டியில் யார் நின்றாலும் கவலையில்லை! அமைச்சர் அதிரடி
தமிழக தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவில்பட்டியில் அமமுக- அதிமுக நேரடியாக மோதுகிறது. அமமுகவில் டிடிவி தினகரனும், அதிமுகவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜு போட்டியிடுகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல நேரங்களில் பல பிரச்சனைகளை தாண்டி அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
தண்ணீர் பிரச்சனை உட்பட பல பிரச்சனைகளை தீர்க்க திட்டங்கள் வகுத்து கொடுத்துள்ளோம், தன்னிறைவு பெற்ற தொகுதியாக கோவில்பட்டியை உருவாக்கியுள்ளோம் என்ற மனநிறைவுடன் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே, நீங்கள் தான் போட்டியிட வேண்டும், உங்களை வெற்றி பெற வைப்போம் என மக்கள் என்னிடம் கூறினர்.
தமிழகத்திலேயே கோவில்பட்டி நகராட்சி தான் சிறந்த நகராட்சி என்ற பெயர் வாங்கும் அளவிற்கு பணிகள் நிறைவேற்றப்பட்டு விருதும் வாங்கியுள்ளது. குடிமராமத்து, அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இந்த அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.
கோவில்பட்டி தொகுதி உள்ள அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன் என்ற மனநிறைவு என்னிடம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தொகுதியில் யார் போட்டியிட்டாலும் கவலையில்லை என்றும், தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றதாக கோவில்பட்டி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.