கோவை தமிழ் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் திடீர் திருப்பம் - ஷாக் ரிப்போர்ட்
பேரூர் தமிழ் கல்லூரியில் பேராசிரியர் திருநாவுக்கரசு மீதான பாலியல் புகார் குறித்த விவகாரத்தில் கல்லூரி வளாக குறை தீர்ப்பு குழு கமிட்டி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கோவை பேரூரில் உள்ள தமிழ் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அக்கல்லூரியின் பேராசிரியர் திருநாவுக்கரசு என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கல்லூரி வளாக குறைதீர்ப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், இக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. அதில் புகார் அளித்த மாணவர் கொடுத்த வீடியோ பதிவுகள் ஒன்றேகால் மணி நேரம் இருப்பதாகவும், புகார் அளித்த மாணவரிடம் விசாரித்த போது 3 மணி நேரத்திற்கும் மேல் வீடியோ இருப்பதாக தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்.
முழுமையான வீடியோவை புகார் அளித்த மாணவர் கொடுக்காததால் அது குறித்து முடிவுக்கு வர முடியவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கல்லூரி முதல்வர் பதவிற்கான போட்டியிலிருந்து திருநாவுக்கரசை விலக்க வேண்டும் என்பதற்காக கல்லூரி ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை தூண்டிவிடும் விதத்தில் பேசி இருப்பதும் தெரியவந்திருக்கிறது.
பேராசிரியர் திருநாவுக்கரசு பதற்றத்தில்தான் அந்த வீடியோவில் ஒப்புக்கொண்டார் என்றும், சம்மந்தப்பட்ட மாணவியிடம் இது குறித்து விசாரணை நடத்திய போது அந்த ஸ்கிரின் ஷாட் தன்னுடையது அல்ல என்றும், பேராசிரியர் தனக்கு எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை என்றும் மாணவி விசாரணையில் தெரிவித்துள்ளார். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய கல்லூரி நிர்வாகத்திற்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.