20 நிமிடங்களில் ஒமிக்ரான் உள்ளதா என கண்டறியலாம் - புதிய பரிசோதனை அறிமுகம்

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் omicronvariant
By Petchi Avudaiappan Dec 14, 2021 11:06 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஒமிக்ரான் வைரஸை 20 நிமிடங்களில் கண்டறியும் வகையில் புதிய பரிசோதனை முறை உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது ஒமிக்ரான் எனும் உருமாறிய வைரஸாக மாறியிருப்பது உலக நாடுகளை அச்சத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது. 

முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது இந்தியா உட்பட பல நாடுகளிலும் பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் கடுமையான விதிகளை அமல்படுத்தி வருகிறது. 

அதேசமயம் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்றும் தடுப்பூசியின் வீரியத்தை குறையச் செய்யும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.கொரோனா வைரஸை கண்டறிய உதவும் ஆர்.டி.பி.சி.ஆர் முறையில் பரிசோதனை செய்தால் இதனை கண்டறிய முடியாது. 

 தற்போது இருக்கக் கூடிய ஒமிக்ரான் பரிசோதனை முறை என்பது மிகவும் செலவுமிக்கதாகவும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. பொதுவாக ஒமிக்ரானை கண்டறிய 24 முதல் 96 மணி நேரங்கள் தேவை என கூறப்படுகிறது.

இந்நிலையில், தென் கொரியாவின் போஹாங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேதியியல் பிரிவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, ஒமிக்ரான் தொற்றை விரைவாக கண்டறியும் வகையிலான பரிசோதனை முறையை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளனர். 

அந்த பல்கலைக்கழகத்தின் வேதியியல் பிரிவு பேராசிரியர் லீ ஜங்-வூக் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு இந்த சோதனை முறையை கண்டறிந்துள்ளது. இது விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.