வேலூரில் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை எளிமையாக கொண்டாடிய திருநங்கைகள்
திருநங்கைகளின் பாரம்பரிய கூத்தாண்டவர் திருவிழாவை கொரோனா தொற்று காரணத்தால் வேலூரில் எளிய முறையில் கொண்டாடிய திருநங்கைகள்.
திருநங்கைகளின் பாரம்பரிய கூத்தாண்டவர் திருவிழா விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் வருடம் ஒருமுறை நடைபெறுவதுண்டு. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள காரணத்தால் இந்த ஆண்டு விழுப்புரத்தில் நடைபெறவில்லை.
எனவே இந்த திருவிழாவை அந்தந்த மாவட்டங்களில் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வேலூர் ஓல்டு டவுன் பகுதியில் வேலூர் மாவட்ட திருநங்கைகள் அமைப்பின் தலைவர் கங்கா நாயக் தலைமையில் வேனு கோபால் ஆலயம் அருகில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இணைந்து கூத்தாண்டவர் கோவிலில் வருடம் ஒருமுறை நடைபெறும் அவ்விழாவில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்களை பின்பற்றி கும்மி அடித்து, கற்பூரம் ஏற்றி தாலியை அறுத்து அழுது எளிமையாக விழாவை கொண்டாடினர்.
இது குறித்து பேசிய வேலூர் மாவட்ட திருநங்கைகள் அமைப்பின் தலைவர் கங்கா நாயக், இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழாவிற்கு நாங்கள் போக முடியாத நிலையில் அடுத்த ஆண்டு இந்த கொரோனா தொற்று நீங்கி மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டி வணங்கினோம். வேலூர் மாவட்டத்தில் உள்ள 300 திருநங்கைகளும் இந்த விழாவில் பங்கேற்றனர் என்றார்.