பிரசித்திப் பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா ரத்து!
தமிழகத்தில் கொரோனாவின் 2ம் அலை அசுர வேகத்தில் அதிகரித்து வருவதால், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்திருக்கிறது. உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் உலகப்புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று.
வருடந்தோறும் இந்த கோவிலில் திருநங்கைகள் கொண்டாடும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி வாய்ந்தது. இக்கோவிலின் திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாது டெல்லி, மும்பை, கல்கத்தா, கேரளா, பெங்களூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வந்து ஒன்றாக கூடுவார்கள்.
திருநங்கைகளுக்கு மட்டுமல்லாமல் குழந்தைப் பேறு இல்லாத பெண்களும் அதிகளவில் இந்த கோவிலுக்கு வருவார்கள். இந்த கோவிலில் 16 நாட்கள் சித்திரை திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவல் என்பதால் கூத்தாண்டவர் கோவிலில் திருவிழா நடைபெறவில்லை.
ஆகையால், இந்தாண்டு தொற்று குறைந்துவிடும்; திருவிழா நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த பக்தர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்நிலையில், கொரோனா 2-வது அலை அதிகரித்து வருவதால் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது பக்தர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.