பாரதிராஜாவுக்கு பதிலளிக்க சென்று சிக்கலில் சிக்கிய அன்புமணி ராமதாஸ் - கடும் எதிர்ப்பு
தலித், தேவர் மற்றும் கவுண்டர் ஆகிய சமூகத்தை தொடர்ந்து சீண்டும் வகையில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் செயல்படுவதாக கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் சூர்யா நடித்து ஓடிடியில் வெளியான ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற காட்சிகளில் வன்னிய அடையாளங்கள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமகவும், வன்னியர் சங்கமும் நடிகர் சூர்யாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவத்தில் இயக்குநர் பாரதிராஜா நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து அன்புமணிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், ஒடுக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. இன்று தமிழ்நாட்டில் அதிகமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி அவர்களுக்கு சமூக நீதியை பெற்றுத் தந்ததில் மருத்துவர் அய்யாவுக்கு நிகராக இங்கு வேறு யாரும் இல்லை.
படத்தில் இடம்பெற்ற காட்சியில் மாட்டியிருக்கும் காலண்டரில் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டம் இல்லாமல் நீங்கள் போற்றி வணங்கும் தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று முழக்கமிட்ட தேவர் திருமகனாரின் படம் இருந்தால் நீங்களும், தேவர் சமுதாயமும் சும்மா இருப்பீர்களா? அல்லது கொங்கு மக்களால் கடவுளுக்கு இணையாக வழங்கப்படும் வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலை அவர்களின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாட்காட்டி இருந்திருந்தால் அவர்கள் கொதித்து எழுந்து இருக்க மாட்டார்களா? அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? படைப்புச் சுதந்திரம் என்று சும்மா இருந்து இருப்பீர்களா? என கடும் கண்டனத்தோடு கேள்வி எழுப்பியிருந்தார்.
அன்புமணியின் இந்த பேச்சுக்கு கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாகவும் தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது! இட ஒதுக்கீடு, தமிழ்நாட்டின் நலன் உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்த பாட்டாளி மக்கள் கட்சி இன்று அதன் பாதையிலிருந்து தடம் புரண்டு, கொள்கை கோட்பாடுகளை மறந்து ஒரு குறுகிய வட்டத்துக்குள் தன் இருப்பை உறுதி செய்து கொள்ளவும், தன் இருப்பை வெளிக் காட்டிக் கொள்ளவும் தரம்தாழ்ந்த அரசியலை முன்னெடுப்பது வேதனையளிக்கிறது!
குறிப்பாக தமிழ்ச் சமூகத்தில் தனது சமூகம் அல்லாத ஒருவர் ஒரு துறையில் ஆளுமையாக உருவாகும் போது அவர்கள் மீது வன்மம் நிறைந்த வசை மொழிகளை கொண்டு அநாகரிகமாக வசை பாடுவதும், அச்சுறுத்துவதும் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது!. குறிப்பாக இந்திய அளவில் போற்றத்தக்க நடிகராகவும், கல்வி சேவையாளராகவும் உள்ள திரு.சூர்யா அவர்கள் மீது வன்மத்தை தொடங்கியிருப்பதும், தமிழகத்தின் முதல்வராக இருந்த திரு.எடப்பாடி பழனிசாமி மற்றும் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களை "டயர்நக்கி" என்ற மூன்றாம் தரமனா அருவருக்கத்தக்க ஒரு சொல்லாடாலை பயன்படுத்தி வசைபாடியதோடு, ஊழல் ஆட்சி என்றும் குற்றச்சாட்டையும் வைத்தார். திரும்ப அவர்களிடமே சென்று கூட்டணியும் வைத்தனர்.
எப்போது அவர்கள் நேர்மையாளராக மாறினார்கள் இவர்களுக்கு? உணர்ச்சிவசப்பட்டு செயலாற்றுவதும், வட மாநிலங்களை போல வன்முறையை நிகழ்த்தி அரசியல் குளிர் காய்வதும் தமிழ் சமூகத்தின் நலனுக்கு உகந்தது அல்ல! அண்ணல் அம்பேத்கர், தீரன் சின்னமலை, பசும்பொன் தேவர் ஐயா புகைப்படம் இருந்தால் ஏற்று கொள்வீர்களா? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளது திரைப்பட குழுவினர் தவறை திருத்தி கொண்ட பின்னும், சர்ச்சைக்குரிய புகைப்படத்தை நீக்கிய பின்னும் தொடர்ந்து பேசுவது தலைமை பண்புக்கு உடைய முதிர்ச்சி அல்ல.
தாழ்த்தப்பட்ட சமூகம், தேவர் மற்றும் கவுண்டர் சமூகத்தை சீண்டும் வகையில் கருத்து வெளியிடுவதை தவிர்த்திருக்க வேண்டும்! இது போன்ற செயல்களை உலகளாவிய தமிழ் சமூகம் விரும்புவதும் இல்லை! தமிழகத்தில் தமிழ் சமூகம் வன்முறை தவிர்த்து ஒற்றுமையோடு செயல்பட்டால் மட்டுமே உலகளாவிய அரசியல் அரங்கில் தமிழர்களின் நிலையையும் பிற சமூகத்தை போல உயர்த்தி கொள்ள முடியும் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் நிதானித்து செயல்படும் சம காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் அதிலிருந்து விலகி வன்மத்தை முன்னிறுத்தி, வெறுப்பை உருவாக்கி, பகையை கூர்தீட்டி அரசியல் செய்வது தமிழர்கள் அனைவருக்கும் தலைகுனிவை உண்டாக்குமே தவிர மேன்மையை அல்ல.
இது போன்ற பாமக'வின் செயல்களை வன்னியர்களே விரும்பமாட்டார்கள்! வன்முறையை நிகழ்த்திட வாய்ப்பை எதிர் நோக்கி காத்திருப்பதே பாமக'வின் வாடிக்கையாக உள்ளது! பாமக மட்டுமே வன்னியர் சமூகத்தின் பிரதிநிதி அல்ல, அதே சமூகத்தில் அந்த மக்களின் அரசியல், பொருளியல் விடுதலைக்காக அறிவுபூர்வமான கருத்தியலை ஊட்டி வன்னியர் சமூக இளைஞர்களை தலைமை பன்போடு உயர்த்தி வரும் அமைப்புகளும், தலைவர்களும் உள்ளனர்.போற்றத்தக்க வகையில் வன்னியர் சமூக இளைஞர்களும் கல்வி உள்ளிட்ட பல துறைகளில் தன் முயற்சியால் முன்னேறியும் வருவதும் போற்றத்தக்கதே! அப்படிப்பட்ட. இளைஞர்கள் உயர் இலட்சியமற்ற குறுகிய அரசியலை வெறுத்தும் வருகின்றனர்.
இது போன்ற அந்த சமூக இளைஞர்களின் சீரிய செயல்பாட்டால் தாங்கள் புறக்கணிக்கப்படுவதை மறைத்து கொள்வதற்காகவும், தங்களது இருப்பை காத்து கொள்ளவும் நிதானமற்ற வகையிலும், சட்டத்திற்கு உட்படாமலும் அவசரகதியில் பாமக செயல்படுவதும் வாடிக்கையாகி விட்டது! கொங்கு வேளாளர்கள் சமூகம் எப்போதும் வன்முறையை தன் நோக்கமாக கொண்ட சமூகம் அல்ல! சட்டத்திற்குட்பட்டு சனநாயக வழியில் தனது கருத்துகளை பதிவு செய்யும் ஒரு பக்குவப்பட்ட சமூகமாகவே இயற்கையாகவே கட்டமைத்து கொண்ட ஒரு பண்பட்ட சமூகமாகவே உள்ளனர். மேலும் பல்வேறு சமூகத்தினரையும் அரவணைத்து வாழும் வாழ்வியல் சூழலை நிலைநாட்டி வரும் சமூகமாகவே உள்ளோம்.
அந்த வகையில் ஜெய்பீம் திரைப்படம் குறித்து பாமகவினர் கருத்துக்கு முகநூலில் நாகரீகமாக பதிவிட்ட கிருஷ்னகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், காட்டேரி பகுதியை சார்ந்த கொங்கு வேளாளர் சமூக இளைஞர் மீது எந்த தவறும் இல்லாத போதும் சாதிய வெறியோடு அந்த இளைஞரை அச்சுறுத்தி மறுப்பு வெளியிட வைத்து இருக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி என்ற ஒரு அமைப்பின் செயல்பாட்டால் மொத்த வன்னியர் சமூகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்சமூகத்திற்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
பாமக'வின் இந்த வன்முறை போக்கை கொங்கு மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது! இது போன்ற செயல்களை முன்னெடுப்பவர்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்!! இவ்வாறு கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.