உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அம்மன் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான உலகப் புகழ்பெற்ற புலீஸ்வரி அம்மன் திருக்கோயில் இருக்கிறது. இந்த கோயில் 108 சக்தி பீடங்களில் ஐம்பதாவது சக்தி தலமாக விளங்குகிறது.
மேலும் உலகத்தில் இருக்கக்கூடிய ஆலயங்களில் புலீஸ்வரி அம்மன் என்ற பெயரில் அமைந்திருக்கக் கூடிய ஒரே ஆலயம் இதுதான் என்று பல்வேறு ஆய்வுகளின் வழியாக நமக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த தலம் சங்ககால இலக்கியங்களான அகநானூறு மற்றும் சிலப்பதிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகவும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் ஆவணங்களின்படி இந்த கோவில் 150 ஆண்டு கால ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றையும் கொண்டு இருக்கிறது.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட புலீஸ்வரி அம்மன் ஆலயத்தை கொள்ளிடம் ஆன்மீக பற்றாளர் பிரபு என்பவரின் முயற்சியால் இந்த கோவிலின் சிறப்புகள் உலக சாதனை அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டது.
அதனை சரிபார்த்த 'ஜாக்கி புக் ஆஃப் வேர்ட் ரெகார்ட்ஸ்" நிறுவனம் இந்த கோவில் மிகவும் தனித்துவமான உலகளாவிய பெயரிடல் மற்றும் பண்டைய இலக்கிய மரபு என்ற பிரிவின் கீழ் இந்த கோயிலுக்கான உலக சாதனை அங்கீகாரத்தை வழங்கி சிறப்பித்தருகிறது. இதனை அறிந்த பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.