பயிற்சி மருத்துவர் கொலை: மம்தாவை விமர்சிப்பவர்களின் விரல்கள் உடைக்கப்படும் - அமைச்சர் சர்ச்சைப் பேச்சு!
மேற்கு வங்க முதல்வர் மம்தாவை நோக்கி கைநீட்டி பேசுபவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என்று திரிணாமூல் அமைச்சர் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பயிற்சி மருத்துவர் கொலை
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கில் முதுகலை பயிற்சி மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும் முதுகலை பயிற்சி மருத்துவர் பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும், கழுத்து, கால்கள் முறிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதும் தெரிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் குற்றம் நடந்த 6 மணி நேரத்தில சஞ்சய் ராய் எனும் நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டஉண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரி நாடு முழுவதிலும் உள்ள மருத்துவர்கள் ,செவிலியர்கள் மற்றும் மாணவர்அமைப்பினர் உள்ளிட்டோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அமைச்சர் சர்ச்சை பேச்சு
இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க தவறியதாக கூறி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவை நோக்கி கைநீட்டி பேசுபவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என்று திரிணாமூல் அமைச்சர் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேற்கு வங்க அமைச்சர் உதயன் குஹா,கொல்கத்தா மருத்துவர் சம்பவத்தில் முதல்வர் மம்தாவை நோக்கி கைநீட்டி பேசுபவர்களும், சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்துப் பேசுபவர்களும் அடையாளம் காணப்பட்டு அவர்களின் விரல்கள் உடைக்கப்படும்.
இல்லையெனில் இப்படி கருத்து கூறும் நபர்களால் மேற்கு வங்கத்தை வங்கதேசமாக மாற்றிடுவிடுவார்கள்.
வங்கதேசத்தில் நடந்தது போன்ற சூழலை அரசு இங்கே ஒருபோதும் அனுமதிக்காது. மாநில மக்களின் உதவியுடன் அந்த முயற்சியை நாங்கள் முறியடிப்போம் என்று பேசியுள்ளார். தற்பொழுது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.