தோனியை மிஞ்சிய விராட் கோலி - ஆச்சரியமளிக்கும் டி20 சாதனைகள்
டி20 கிரிக்கெட் கேப்டன்சியில் மிகப்பெரும் சாதனைகளை வைத்துக்கொண்டு விராட் கோலி பதவி விலகியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். பணிச்சுமையை கருத்தில் கொண்டு வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதனால் சமூக வலைதளங்களில் கேப்டன்சி, கிங் கோலி என பல்வேறு ஹேஷ்டேக்குகள் மூலம் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே டி20 கிரிக்கெட்டில் யாராலும் அசைக்க முடியாத கேப்டன்சி ரெக்கார்ட்களை கோலி வைத்துள்ளது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை 45 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ள விராட் கோலி 29 வெற்றிகளையும், 14 தோல்விகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார். இவரின் கேப்டன்சி வெற்றி சதவீதம் 64.44 ஆக உள்ளது. இந்த சதவீதம் முன்னாள் கேப்டன் தோனியை விட அதிகம். அதேபோல உலகளவில் சிறந்த டி20 கேப்டன்களின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2வது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் தோனி 58.33 சதவீதத்துடன் 6வது இடத்தில் உள்ளார். இப்படி தோனியின் பல சாதனைகளை முந்தியுள்ள கோலி பதவி விலகியது குறித்து ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.