‘ரொம்ப கஷ்டமா இருந்துச்சு’ - சாஹல் புறக்கணிக்கப்பட்ட காரணத்தை விளக்கிய விராட் கோலி

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் யுவேந்திர சாஹல் தேர்வு செய்யப்பட்டாதது குறித்து நடைபெற்ற கார சார விவாதம் குறித்து கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார். 

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது.இதற்காக அனைத்து அணிகளும் தயாராகியுள்ள நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டு தயாராகியுள்ளது.

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷன் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் அணியில் இடம் பெற பல எதிர்பார்க்கப்பட்ட வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. 

அவர்களில் குறிப்பாக விராட் கோலியின் ஆஸ்தான பவுலராக ஆர்சிபி அணியில் விளங்கும் சாஹலும் ஒருவர். இந்நிலையில் டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து சாஹல் ஒதுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார். சாஹலை நீக்கியது சங்கடமான முடிவுதான்.

கடந்த சில வருடங்களாக இந்தியாவின் முக்கியமான பவுலராக சாஹல் விளங்குகிறார். அவரின் பெயர் அணித்தேர்வின் போது கூறப்பட்டது. ஆனால் வேகமாக பந்துவீச வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் அவர் நீக்கப்பட்டார்.போட்டி நடைபெறவிருக்கும் அமீரகத்தில் நேரம் போக போக பிட்ச்-ல் வேகம் குறையும். எனவே அங்கு முடிந்த அளவிற்கு வேகமாக போடக்கூடிய பவுலர்களே தேவை.

இந்த ஒரே ஒரு காரணத்திற்காக தான் யுவேந்திர சாஹலை புறக்கணித்துவிட்டு ராகுல் சஹாரை எடுத்தோம். ராகுல் சஹார் ஐபிஎல், இலங்கை தொடர் என தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். இதனால் அவர் நிச்சயம் இக்கட்டான சூழலில் உதவுவார் என நம்புகிறோம் என விராட் கோலி தெரிவித்துள்ளார். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்