துன்பத்திலும் ஒரு இன்பம் - சாதனைப் படைத்த விராட் கோலி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
அபுதாபியில் உள்ள ஷேக் சையது மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூரு அணி 92 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் பாதி தொடரில் சிறப்பாக விளையாடி முதல் 4 இடங்களுக்குள் முன்னேறியிருந்த பெங்களூரு அணிக்கு இந்த தோல்வி மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. அதுவும் இந்த தொடருடன் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்த நிலையில், இந்த தோல்வி ரசிகர்களுக்கு இரட்டை அடியாக அமைந்தது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இப்போட்டியின் மூலம் பெங்களூரு கேப்டன் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இன்றைய போட்டி விராட் கோலிக்கு 200வது (பெங்களூர் அணிக்காக மட்டும்) போட்டியாகும். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக 200 போட்டிகள் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
இந்த பட்டியலில் தோனி 182 போட்டிகளுடன் இரண்டாவது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 172 போட்டிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஆனால் இப்போட்டியில் பேட்டிங்கில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோலி 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.