விராட் கோலியால் ஜெயிலுக்கு சென்ற 4 ரசிகர்கள் - கிரிக்கெட் உலகில் பரபரப்பு
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியுடன் செல்ஃபி எடுத்த 4 ரசிகர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.இதில் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில் பெங்களூருவில்பகலிரவு போட்டியாக நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்த போட்டியில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய போது முன்னாள் கேப்டன் விராட் கோலி உள்பட இந்திய அணியினர் பீல்டிங் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது 6வது ஓவரில் முகமது ஷமியின் பந்து வீச்சில் குசல் மெண்டிஸ் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கம்பி வேலியை தாண்டி மைதானத்திற்குள் திடீரென நுழைந்த 4 ரசிகர்கள் நேராக விராட் கோலியை நோக்கி ஓடினர். அதில் ஒரு ரசிகர் தனது மொபைல் போன் மூலம் கோலியை செல்பி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். விராட் கோலியும் அதற்கு சம்மதித்து போட்டோ எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மிகுந்த சிரமத்திற்கு இடையே இருக்கை பகுதிக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் மைதானத்துக்குள் குதித்த 4 வாலிபர்கள் மீது பெங்களூரு கப்பன் பூங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் கைதான 4 பேரும் ஒருவருக்கொருவர் நண்பர்கள் இல்லை என்றும், ஒருவர் மைதானத்துக்குள் புகுவதை பார்த்து நுழைந்ததாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பெங்களூரு போலீசாரின் பாதுகாப்பு வளையத்தை மீறி மைதானத்துக்குள் ரசிகர்கள் நுழைந்தது தொடர்பாக அதிருப்தி தெரிவித்த பிசிசிஐ கர்நாடக போலீசாருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.