கொடநாடு வழக்கு; நீதிபதி சஞ்சய் பாபா பணியிடமாற்றம்..!
கொடநாடு கொலை,கொள்ளை வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா தேனி மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 58 நீதிபதிகள் பணியிடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் பணியிடமாற்றம் செய்யப்பட்ட 58 நீதிபதிகளில் உதகை நீதிபதி சஞ்சை பாபாவும் ஒருவராவார். கொடநாடு வழக்கில் கூடுதல் விசாரணை கடந்த ஆண்டு ஜுலையில் தொடங்கியது முதல் விசாரித்து வந்தார் நீதிபதி சஞ்சை பாபா.
இந்த வழக்கில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வந்தார்.மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நிர்வாக காரணங்களுக்காக தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு பதில் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக முருகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சய் பாபா பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.