கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு :3 -வது நாளாக தொடரும் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக பிரபல மணல் சப்ளையரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ளது.
கொட நாடு வழக்கு
இந்த பங்களாவில் கடந்த சில ஆண்டிற்கு முன் கொள்ளை நடந்தது. இதை தடுக்க முயன்ற எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சயான், மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடந்து வருகிறது. அதன்படி சசிகலா உள்பட இதுவரை 230-க்கும் மேற்பட்டவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்தனர்.
தொடரும் விசாரணை
நேற்று முன்தினம் மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் பிரபல மணல் சப்ளையர் ஆறுமுகசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமார் (48) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் குவாரிகளில் மணல் எடுக்கும் ஒப்பந்தம் பெற்றிருந்த ஆறுமுகசாமியின் சொத்துகள் பல மடங்கு உயர்ந்தது. அதிமுகவினருடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தெரிகிறது.
அதன் பலனாக செந்தில் குரூப் ஆப் கம்பெனி உட்பட பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். செந்தில்குமாரிடம் இன்றும் 3-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.