கோடநாடு கொலை கொள்ளை வழக்கு : சசிகலாவிடம் 2-வது நாளாக நடைபெற்ற விசாரணை நிறைவு
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இரண்டாவது நாளாக 4 மணிநேரம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்துள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் 2-வது நாளாக இன்று விசாரணை தொடங்கியது. கோடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக, தனிப்படை போலீசார் இதுவரை 250-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, சசிகலாவின் உறவினரான விவேக் மற்றும் கோடநாடு பங்களா மேலாளார் நடராஜன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில், கோடநாடு பங்களாவின் உரிமையாளர் என்ற அடிப்படையில் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ,ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவின் வீட்டில்காலை 10 மணி முதல் விசாரணை நடத்தி வந்தனர்.
முதல் நாளில் ஐந்து மணி நேரம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையான இன்றும் 4 மணிநேரமாக தொடர்ந்த விசாரணை தற்போது நிறைவுபெற்றுள்ளது.
இந்த விசாரணையில், 2017 கொலை, கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு பங்களாவை நேரில் சென்று பார்த்தீர்களா, கனகராஜ் கொலை, சிசிடிவி கண்காணிப்பாளர் தினேஷ், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கோடநாடு பங்களாவுடன் சம்மந்தப்பட்ட பிரமுகர்கள் குறித்து கேள்வி எழுப்பபட்டதாக கூறப்படுகிறது.