கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு தீ..!
பற்றி எரியும் கொடைக்கானல் மலையின் காட்டுத் தீ, மலைகளின் இளவரசி நெருப்பால் எரிவது வனத்துறையின் அலட்சியமா? காலநிலை மாற்றமா என்பது குறித்து ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதிகள் கோடை வெப்பத்தின் காரணமாக வனத்தில் கடந்த ஒரு வாரமாக காட்டுத்தீ பரவி வருகிறது.
கொடைக்கானல் மலைப் பகுதிகளான பெருமாள்மலை, மச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத்தீ பரவல் அதிகமாக உள்ளது.
தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயால் தோகைவரை, மச்சூர், பெருமாள்மலை உள்ளிட்ட பகுதிகளும், பழநி அடிவாரப் பகுதியான கலையமுத்தூர், வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையும் புகைமண்டலமாக உள்ளது .
எரிகின்ற காட்டுத் தீ இயற்கையின் சமச்சீரற்ற நிலை மூலம் செடி கொடி மரங்களை அழிப்பதன் மூலமும் விலங்கினப் பெருக்கத்தை அழிப்பது மூலமுமாக ஏற்படும் காட்டுத் தீ கொடைக்கானல் போன்று பல மலைகளை எரித்து நாசமாக்கி வருவது தொடர்கதைதான்.
உலகம் முழுக்கப் பல்வேறு நாடுகளில் காட்டுத்தீ தீவிர பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் மலைச்சரிவுகள் முழுக்க காட்டுத்தீ பரவியது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சைபீரியாவின் காடுகள் பெரும்பாலும் காட்டுத் தீயில் சிக்கி, கருகிய நிலையை பார்த்துள்ளோம்.
வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள, ஐரோப்பா, வட அமெரிக்கா, என்று அனைத்துப் பகுதிகளிலும் இந்தக் கோடைக்காலத்தின் ஜூலை மாதம், மோசமான விளைவுகளை உண்டாக்கியுள்ளது.
தற்போது உக்ரைனில் போர்தொடுத்து வரும் ரஷ்யாவிலும் காட்டுத் தீ விட்டு வைக்கவில்லை. இத்தாலியில் 2021ம் ஆண்டில் ஒரு வாரத்தில் மட்டும் 800 தீ விபத்துகள் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளன.
இந்திய அளவிலும் எண்ணிக்கை அதிகம் என்றாலும் தமிழகத்தில் தற்சமயம் ஏற்பட்டுள்ள கொடைக்கானல் காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதில் சவால்களும் உள்ளன.
மலைப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ பரவிக்கொண்டே இருக்கிறது.
கொடைக்கானல் வனப்பகுதியில் கால்நடை மேய்ச்சல், விறகு வெட்டுவோர், கரி எடுப்பது போன்ற காரணங்களுக்காகவும் கோடைக்காலங்களில் மனித தவறால் வனத்தில் தீ பற்றுகிறது.
வனத்திலுள்ள மரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டதால் மழைபொழிவும் குறைந்துவிட்டது. மேலும் வனத்தில் முறையாக ஃபயர் லைன்கள் அமைக்கப்படவில்லை என்ற புகார்களும் உண்டு.
இப்படி ஏற்படும் காட்டுத்தீயினால் ,மதிப்பு மிக்க மரங்கள் வேரற்றுப்போகலாம், உயிர்ப்பெருக்கம் தடைபடலாம், கார்பன் வளிமண்டலம் அதிகரிக்கலாம்,
மண்ணரிப்பு நிகழலாம், ஓசோன் படலம் சுருக்கமடைந்திடும் என விளைவுகள் பட்டியலிடப்படுகின்றன வனத்துறையினரால்.
அதனால் வனத்தை பாதுகாப்பதில் தீவிரத்தை காட்டவேண்டிய துறை தீ வரும்போது மட்டும் அக்கறை காட்டுவதும் வருத்தமான செயல்தான் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கீழ்மலை பகுதிகளில் வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை மொத்தம் 10 ஏக்கர் பரப்பில் தீ பரவியுள்ளது. இதில் பெரும்பாலும் புற்கள் எரிந்துள்ளன.
விரைவில் முழுவதும் காட்டுத்தீ அணைக்கப்படும். -திண்டுக்கல் மாவட்டவனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து ஒரு விழிப்புணர்வு வீடியோவை நடிகர் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ மூலம் காட்டுத் தீ ஏற்படாமல் இருக்க தனிமனிதர்களும் வனத்தின் மேல் அக்கறை கொண்டவர்களாக வனத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
காலநிலை மாற்றம் எவ்வளவு மோசமான விளைவுகளை எதிர்காலத்தில் கொண்டு வரப் போகிறது என்பதற்கான முன்னோட்டமாகவே, உலகளாவிய காட்டுத்தீ பேரிடர்களைப் பார்க்க வேண்டியுள்ளது.
அதில் கொடைக்கானலும் விதிவிலக்கல்ல… வனம் காப்போம்.. காட்டுத் தீ தவிர்ப்போம்.