கொரோனா தொற்று என்ன என்றே தெரியாமல் வாழும் மலைகிராம மக்கள் - யார் அவர்கள்? பொதுமக்கள் அதிர்ச்சி!
கொடைக்கானலில் கொரோனா தொற்று என்றால் என்ன என தெரியாமலேயே வாழ்ந்து வரும் மலை கிராம மக்களின் அவல நிலை என்று தீரும் என பார்க்கலாம்.
கொடைக்கானலில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் வெள்ளகெவி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் கண்டறியப்பட்ட பழமை வாய்ந்த கிராமம் ஆகும்.
இந்த கிராமம் கொடைக்கானல் தோன்றுவதற்கு முன்பே கண்டறியப்பட்டதாக அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கிராமத்தில் சுமார் 650க்கும் மேற்பட்டவர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இந்த வெள்ளகெவி கிராமத்திற்கு செல்வதற்கு சாலை வசதிகள் ஏதும் இல்லாததால், கொடைக்கானலின் வட்டக்கானல் பகுதியில் இருந்து 6 கிலோ மீட்டர் கரடு முரடான ஒத்தையடி நடந்து தான் செல்ல முடியும்.
மேலும் வெள்ளகெவி கிராமத்தில் இருந்து கும்பக்கரை அருவி வழியாக பெரியகுளம் செல்வதற்கும் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்த கிராமத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது , குறிப்பாக ஏலக்காய்,காபி,அவக்கோடா,மிளகு உள்ளிட்ட மலை பயிர்கள் அதிகம் விவசாயம் செய்யப்படப்படுகிறது, இங்கு விளைவிக்கும் விளை பொருட்களை தலை சுமையாகவும் ,பொதி சுமக்கும் குதிரைகள் மூலம் கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்த கிராமத்தை சுற்றியும் 24 தெய்வங்கள் காவலுக்கு இருப்பதால் கிராமமக்கள் காலணிகளை அணியாமல் தெய்வங்களுக்கு பயந்து வெறும் கால்களில் ஊருக்குள் நடந்து செல்வதாக கூறப்படுகிறது.
தற்போது உலகமே அஞ்சி நடுங்கும் கொரோனா தொற்று என்ன என்றே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து அவர்களிடம் கேட்ட போது, கொரோனாவா? அப்படி என்றால் என்ன? அது எங்க இருக்கும்? என கேட்டுள்ளனர். மேலும் இங்குள்ள மக்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற உடல் உபாதகைகள் ஏற்பட்டால் கை வைத்தியம் மூலமாக சரி செய்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இந்த கிராமத்தில் 5 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி இருக்கிறது என்றும், ஆனால் பள்ளிக்கு ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்கு வராததால் தங்களது குழந்தைகள் படிப்பு வீணாவதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர், அதே போல இங்கு நூலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் போன்ற கட்டிடங்கள் பூட்டிய நிலையில் மட்டுமே இருப்பதாகவும், அரசு அதிகாரிகள் யாரும் இங்கு வருவது இல்லை எனவும் கூறுகின்றனர்.
மேலும் இங்கு யாருக்கேனும் அதிகளவில் உடல் நிலை சரியில்லாமல் போனால் வெகுதூரம் நோயாளியை டோலி கட்டி சுமந்து செல்லக்கூடிய அவல நிலை இருந்து வருவதாகவும், இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் என்று ஏதும் இல்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.
நவீன காலத்தில், நிலாவுக்கு, விண்வெளிக்கு என்றும் நாம் பயணம் செய்து கொண்டிருக்கும் இந்த வளர்ச்சி மிக்க இந்தியாவில் 400 ஆண்டுகளாக சாலையும் இல்லாமல், பள்ளியும் இல்லாமல், மருத்துவமனையும் இல்லாமல் தனி தீவாக வாழும் இந்த மலை கிராம மக்களுக்கு இனியாவது தீர்வு கிடைக்குமா என கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர்.