1 நிமிடத்தில் 88 முறை தோப்புகரணம் - சாதனைப் படைத்த கொடைக்கானல் மாணவர்
கொடைக்கானலில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் 1 நிமிடத்தில் 88 முறை தோப்புகரணம் செய்து ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தனியார் பள்ளியில் பிரசனன் என்ற மாணவன் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சிறு வயது முதலே தோப்புக்கரணத்தில் ஆர்வம் கொண்டவர்.
இவர் கடந்த வருடத்தில் 1 நிமிடத்தில் 82 முறை தோப்புக்கரணம் செய்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றார். இந்நிலையில் தனது முந்தைய சாதனையை தானே முறியடிக்கும் வகையில் தற்போது 1 நிமிடத்தில் 88 முறை தோப்புக்கரணம் செய்து ஆசியா புக் ரெக்கார்டஸ்க்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர் மாணவனை பாராட்டும் விதமாக சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கியுள்ளனர். இது குறித்து சாதனை புரிந்த மாணவன் பிரசனன் கூறியதாவது: தோப்புக்கரணம் பழைய கலை அதை திரும்பவும் நடைமுறைக்கு கொண்டுவருவதாகவும், தோப்புக்கரணம் செய்வதனால் உடம்பில் வெப்ப ஓட்டம்,ரத்த ஓட்டம்,காற்றோட்டம் இந்த மூன்று ஓட்டங்களையும் சீர்படுத்துவதாகவும்,நியாபக சக்தியை அதிகப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளை தோப்புக்கரணம் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும்,யோகா கலையை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,யோகா கலையில் கூடுதலாக தோப்புக்கரணத்தையும் சேர்க்க வேண்டும் என அரசிற்கு சாதனை புரிந்த மாணவன் கோரிக்கை வைத்துள்ளார்.