வீட்டிலேயே அடைந்து இருந்த மக்களுக்கு சுதந்திரம்! சுற்றுலா தலங்களில் குவியும் மக்கள்!
கொடைக்கானலில், இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரிசைக்கட்டி குவிந்தனர்.
இங்கு குவிந்த சுற்றுலா பயணிகளை பூங்கொத்து கொடுத்து, பூங்கா நிர்வாகம் உற்சாகமாக வரவேற்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்களான நீலகிரி, கொடைக்கானல், குற்றலாம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு தடை விதித்திருந்தது.
இதனையடுத்து கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருவதால், தமிழகத்தில் இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதிலும், குறிப்பாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் மற்றும் இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே ஆர்வத்துடன் வர தொடங்கியுள்ளனர். இதனையடுத்து கொடைக்கானல் நுழைவாயில் சோதனை சாவடி அருகில் உள்ள வெள்ளிநீர் வீழ்ச்சி அருவியில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும் கொடைக்கானல் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரையண்ட் பூங்கா,ரோஜா பூங்கா,செட்டியார் பூங்காக்களும் திறக்கப்பட்டன.
பிரையண்ட் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு பூங்கா நிர்வாகத்தினர்
சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டது.
இது போன்று, மற்ற சுற்றுலா தலங்களும் ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக சென்று வருகின்றனர்.