கொடைக்கானலில் ஊரடங்கினை மீறுவோருக்கு .. கொரோனா பரிசோதனை செய்து காவல்துறையினர் அதிரடி!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே திரிபவர்களுக்கு காவல்துறை மற்றும் வருவாய்துறையினர் சார்பில் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொடைக்கானலில் நாளுக்கு நாள் கொரனோ தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும், கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களை கண்காணிக்கும் வகையில் நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் , கோட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிந்த 11 இளைஞர்கள் மற்றும் 5 பெண்களுக்கும் காவல்துறை சார்பில் அபராதம் விதித்தனர்.
மேலும், அவர்களை ஒரு வேனில் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களின் முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு பரிசோதனை முடிவுகள் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும் எனவும்,அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றுபவர்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.