திமுக வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி: சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ள நிலையில், திமுக வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி பெற்றதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில், திருச்சி மேற்குத் தொகுதி திமுகவின் முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மீண்டும் போட்டியிட்டார், இவரை எதிர்த்து அதிமுக சார்பில் வி.பத்மநாதன் போட்டியிட்டார்.
இந்நிலையில், இந்தத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (மே 02) காலையில் தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மேற்குத் தொகுதியில் கே.என்.நேரு வெற்றி என்றும், அவருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் திருச்சி மாநகர் முழுவதும் நேற்று (மே 01) இரவே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பானது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளில் திமுகவே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
