எம்.பி.யை ஒருமையில் பேசிய விவகாரம் : வருத்தம் தெரிவித்த அமைச்சர் கே.என்.நேரு
மதுரை எம்.பி. சு.வெங்கடேசனை ஒருமையில் பேசியது குறித்து விளக்கம் தெரிவித்துள்ள அமைச்சர் கே.என்.நேரு இனி இதுபோன்று நிகழாது என தெரிவித்துள்ளார்.
மதுரையில் கடந்த புதனன்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் விமான நிலைய விரிவாக்க கட்டுமான பணிகள் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த நேரு, ‘சம்பந்தப்பட்டவர்களை விட்டு விட்டு என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். வெங்கடேசன்னு ஒரு ஆளு இருக்கான். அந்தாளுட்ட கேளுங்க. எங்கிட்ட கேட்கிறீங்க..’ என்று ஒருமையில் பேசி பதிலளித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், தோழர் சு.வெங்கடேசன் எம்.பி. குறித்து ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது. பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவார்கள், ஏற்பார்கள் என்று கூறியிருந்தார்.
இந்த சம்பவங்கள் கூட்டணி கட்சிகளாக இருக்கும் திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தனது செயலுக்கு கே.என். நேரு வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.