மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் - அமைச்சர் கே.என்.நேரு!

Protest Minister KN Nehru Formers
By Thahir Jul 06, 2021 10:02 AM GMT
Report

மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என விவசாயிகள் போராட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.

மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் - அமைச்சர் கே.என்.நேரு! | Kn Nehru Minister Formers Protest

காவிரி ஆற்றின் குறுக்கே, மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற நிலையில், ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பே விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்திவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சிலர், தடையை மீறி ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். ஆட்சியர் அலுவலக கதவின் மீது ஏறிக் குதிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதற்கிடையே, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். விவசாயிகள் போராட்டம் குறித்து அறிந்த அமைச்சர்கள், போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அமைச்சர் கே.என். நேரு விவசாயிகளிடையே பேசியபோது, "மேகேதாட்டுவில் அணையை கட்ட விட மாட்டோம். மார்க்கண்டேய நதி மீது அணை கட்டியதை நாம் இடிக்க முடியாது. அதற்காக நீதிமன்றத்தை நாட உள்ளோம். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இது குறித்து பேச டில்லி சென்றுள்ளார்.

விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட அரசாக முதலமைச்சர் தலைமையில் திமுக அரசு செயல்படுகிறது. விவசாயிகளுக்கு புதிய நீர்பாசன திட்டங்களை வரும் பட்ஜெட்டில் முதலமைச்சர் அறிவிக்க உள்ளார். விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட், திமுக அரசில் தான் போடப்படுகிறது.முதலமைச்சருக்கு விவசாயிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றார்.

அமைச்சர் நேரு அளித்த வாக்குறுதிகளை விவசாயிகள் கைதட்டி வரவேற்பளித்தனர். இதனையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.