திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்? உறுதியளித்த கே.என்.நேரு
மு.க.ஸ்டாலின் விரைவில் சட்டமன்றத்தில் பொறுப்பேற்பது உறுதி என கே.என்.நேரு பேசியுள்ளார்.
இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டி?
2026 சட்டமன்ற தேர்தலில், முதல் தேர்தலை சந்தித்த தவெகவிடம், திமுக ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாக அமர்ந்தாலும் திமுக தலைவரும் முதல்வர் வேட்பாளருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியடைந்தது திமுகவினரை வருத்தமடைய செய்தது.

சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், குட்டிக்கதை கூறி "உங்கள் அப்பாவை எங்கே காணோம்" என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சீண்டினார்.
முதல்வரின் பேச்சு திமுக நிர்வாகிகளை கொந்தளிக்க செய்த நிலையில், தவெக அரசை ஆதரிக்கும் விசிக தலைவர் திருமாவளவன், CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தலைவரைப் பார்த்து, எங்க உங்க அப்பாவை காணோம் என கேட்கிறார். வருவாரு.. சீக்கிரமா வந்துருவாரு உள்ளே. அது தான் எங்களால் சொல்ல முடியும்.

விரைவாக அவர் சட்டமன்றத்திற்குள் வந்து மீண்டும் பொறுப்பேற்பார். அது உறுதி. நேற்று வரைக்கும் கம்முனு இருந்தான் கட்சிக்காரன் எல்லாம்.. நேற்று இப்படிப் பேசினாரோ அதிலிருந்து கிளம்பி உட்கார்ந்துட்டான் எல்லா ஆளுகளும், தமிழ்நாடு முழுவதும் கட்சிக்காரன் எழுந்து உட்கார்ந்துட்டான்" என பேசியுள்ளார்.
கே.என்.நேரு இவ்வாறு பேசியதன் மூலம், வரும் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு, மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.