கேப்டன் பதவியுடன் ரூபாய் 17 கோடியை அள்ளிய கே.எல் ராகுல் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐபிஎல் தொடரில் புதிதாக இணையவுள்ள லக்னோ அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தக்கவைக்கப்பட்டுள்ள விவரங்கள் வெளியாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக 2 அணிகள் இணைந்துள்ளதோடு, வீரர்களுக்காக நடக்கவுள்ள மெகா ஏலமும் இந்தாண்டு தொடரை பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக்கியுள்ளது. மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் தங்கள் அணி சார்பில் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரத்தை ஐபிஎல் நிர்வாகக் குழுவிடம் இன்று வழங்குகிறது.
இதனிடையே இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு அணிகளும் வெளியிட்டுள்ளன. அதில் லக்னோ அணி தனது அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ரூ.17 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதே போல் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான மார்கஸ் ஸ்டோய்னிஸை 9.2 கோடி ரூபாய்க்கும், ரவி பிஸ்னோயை 4 கோடி ரூபாய்க்கும் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த மூன்று வீரர்களுக்காக 32 கோடி ரூபாயை செலவு செய்துள்ள லக்னோ எஞ்சியுள்ள 58 கோடி ரூபாயுடன் மெகா ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.