கே.எல் ராகுல் மருத்துவமனையில் திடீர் அனுமதி..என்னாச்சு?

பஞ்சாப் அணி கேப்டன் கே எல் ராகுலுக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கடும் வயிற்றுவலி நேற்று ஏற்பட்டதையடுத்து, உடனடியாக பயோ-பபுளில் இருந்து வெளியே வந்து, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கே.எல்.ராகுலுக்கு குடல்பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது. ஆனால், இதுவரை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் அதுகுறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து, இன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை மயங்க் அகர்வால் வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று மட்டுமல்ல அடுத்துவரும் போட்டிகளுக்கும் மயங்க் அகர்வாலே கேப்டனாக செயல்படுவார்.

இதுகுறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில்

' கேஎல் ராகுல் நேற்று இரவு மிகக் கடுமையான அடிவயிற்று வலியால் அவதிப்பாட்டார். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டும் வலி குறையவில்லை. இதையடுத்து, உடனடியாக அவசரப்பிரிவு சிகிச்சைக்கு மாற்றப்பட்டு, ராகுலுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் ராகுலுக்கு குடல்பகுதியில் சதைவளர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதை உடனடியாக அகற்றவேண்டும் என்பதால், கே.எல்.ராகுல் அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்துவரும் போட்டிகளுக்கு அணியை மயங்க் அகர்வால் வழிநடத்துவார் ' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று இரவு ராகுலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்குப்பின் அடுத்த 10 நாட்களில் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதன்பின் ராகுல் பயோபபுள்சூழலுக்குள் வர ஒருவாரம் தனிமைப்படுத்தப்பட வேண்டும், போதமான ஓய்வு ஆகியவற்றை கருத்தில் கொள்ளும்போது ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்