தொடர் தோல்விக்கு காரணம் இவர் தான் - கதறும் கே.எல்.ராகுல்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோலிவயடைந்தது.
ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஐடன் மார்க்ரம் 42 ரன்களும், தீபக் ஹூடா 28 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியும் பேட்டிங்கில் தடுமாறியது.
இருந்த போதிலும் கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 ரன்கள் எடுத்ததன் மூலம் 19வது ஓவரில் இலக்கை எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசியுள்ள பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல் ராகுல், பேட்டிங்கில் சொதப்புவதே பஞ்சாப் அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து கே.எல் ராகுல் பேசுகையில், “135 ரன்கள் என்பது போதுமான ஸ்கோர் கிடையாது. 170 ரன்களாவது அடித்திருக்க வேண்டும்.
அந்தளவுக்கு ஆற்றல் எங்களிடம் இருந்தது. பந்துவீச்சாளர்கள் அனைவரும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
அடுத்த மூன்று போட்டிகள் மிகவும் முக்கியம். உள்ளதை உள்ளபடி சொல்கிறேன், எங்களால் அழுத்தங்களை சமாளித்து விளையாட முடியவில்லை.
குழுவாக இணைந்து அடுத்தடுத்த போட்டிகளில் நேர்மறை சிந்தனையுடன் விளையாட முயற்சிப்போம். அப்படி விளையாடினால்தான், வெற்றிபெற முடியும்” என்று தெரிவித்தார்.