சீறும் சிராஜ், சிறகடிக்கும் கே.எல்.ராகுல்- இன்பதிர்ச்சி கொடுத்த ஐசிசி டெஸ்ட் தரவரிசை
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் கேஎல் ராகுல், முகமது சிராஜ் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, ஐசிசி டெஸ்ட் தரவரிசை புதன்கிழமை வெளியிடப்பட்டது.
2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கியப் பங்காற்றிய ராகுல் மற்றும் சிராஜ் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
பேட்டிங்குக்கான தரவரிசையில் ராகுல் 19 இடங்கள் முன்னேறி 37-வது இடத்தைப் பிடித்துள்ளார். பந்துவீச்சுக்கான தரவரிசையில் சிராஜ் 18 இடங்கள் முன்னேறி 38-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் எடுத்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 2 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் (893 புள்ளிகள்) பிடித்துள்ளார்.
முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கும் ஜோ ரூட்டுக்கும் இடையே 8 புள்ளிகளே வித்தியாசம்.
பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். மார்க் வுட் 5 இடங்கள் முன்னேறி 37-வது இடத்தைப் பிடித்துள்ளார்.