இந்திய அணியில் வெடித்த அடுத்த பிரச்சனை - முதல் ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் இல்லை
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறிய ஐடியா ஒன்றை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பிசிசிஐ செயல்படுத்தி பார்க்கவுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே முதல் ஒருநாள் போட்டியில் துணை கேப்டன் கே.எல்.ராகுல் இடம் பெற மாட்டார் என கூறப்படுகிறது. இதற்கு காரணம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி என சொல்லப்படுகிறது.
அதாவது 2017 ஆம் ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எப்போதுமே விக்கெட் கீப்பர் தான் அணியின் துணைக்கேப்டனாக இருக்க முடியும். அதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி.
ஏனென்றால் போட்டியின் போது ஃபீல்டிங் செட் செய்வது தொடர்பான ஆலோசனைகளை விக்கெட் கீப்பரால் மட்டும் தான் கேப்டனுக்கு சரியாக கூற முடியும். மேலும் இக்கட்டான சூழல்களில் விக்கெட் கீப்பர் தான் சில ஃபீல்டிங் மாற்றங்களை கொண்டு வருவார். எனவே விக்கெட் கீப்பர் தான் துணைக்கேப்டனாக இருக்க முடியும் எனத் தெரிவித்தார்.
இதனை தான் பிசிசிஐ தற்போது முயற்சி செய்து பார்க்கிறது. ஏற்கனவே அணியில் கேப்டன்சி பிரச்சனை நிலவி வரும் நிலையில் ரோகித் சர்மாவுக்கு பிறகு கே.எல்.ராகுலை கேப்டனாக நியமிக்கும் எண்ணத்தில் அவரை துணைக்கேப்டனாக நியமித்தனர். தற்போது அந்த வரிசையில் முதல் ஒருநாள் போட்டிக்கு விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இதனை வைத்து டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் ரிஷப் பண்ட் பதவி பெற வாய்ப்புள்ளது.