‘’உள்ள வந்தா அதிரடி அண்ணன் யாரு ‘’ : இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி வரும் 18, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் நடைபெறும் இந்த தொடருக்கான அணியை கடந்த ஜூலை 30-ம் தேதி அறிவித்தது பிசிசிஐ.
அப்போது தவான் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் இல்லை.
கேப்டன் ராகுல்
தற்போது அவர் முழு உடற்தகுதியை பெற்றுள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. அதன் காரணமாக அவர் ஜிம்பாப்வே தொடரில் விளையாடுகிறார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த தொடருக்கான கேப்டனாக அவரை தேர்வுக் குழு நியமித்துள்ளது. முன்னதாக, ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு முன்னதாக காயம் காரணமாக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடைசியாக அவர் கடந்த பிப்ரவரியில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.