புதிய அணிகளின் கேப்டனாக கே.எல் ராகுல், ஹர்த்திக் பாண்ட்யா நியமனம்

Captain KL Rahul Hardik Pandya appointment IPL 2022
By Thahir Jan 11, 2022 12:49 PM GMT
Report

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் லக்னோ, அகமதாபாத் ஆகிய புதிய அணிகள் பங்கேற்கின்றன.

லக்னோ அணியை ஆர்.பி.எஸ்.ஜி. குரூப் ரூ.7,090 கோடிக்கும், அகமதாபாத் அணியை சி.வி.சி. கேபிட்டல் நிறுவனம் ரூ.5,625 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தன.

இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களை தக்கவைக்கும் பணி முடிந்து விட்டது.

பழைய அணிகள் விதிமுறையின்படி சில வீரர்களை தக்கவைத்து இருந்தது. ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12 மற்றும் 13-ந் தேதிகளில் பெங்களூரில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய அணிகளான லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகள் முறைப்படி இணைந்தன.

போட்டிக்கான இடம், வீரர்கள் ஏலம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஏலத்துக்கு முன்பு 2 புதிய அணிகளிடம் தக்கவைத்து கொள்ளும் வீரர்களின் விவரங்களை கிரிக்கெட் வாரியம் கேட்கும். இந்த இரு அணிகளும் தாங்கள் விரும்பும் வீரர்கள் பட்டியலை அளிக்கும். இரு அணிகளும் 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

இதற்கிடையே லக்னோ அணி லோகேஷ் ராகுலை ஏலத்துக்கு முன்பு எடுக்கிறது. அவர் அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுகிறார்.

இதேபோல ஸ்டோனிஸ் (ஆஸ்திரேலியா), ரபடா (தென் ஆப்பிரிக்கா) ஆகியோரும் அந்த அணிக்கு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அகமதாபாத் அணி தேர்வு செய்துள்ள வீரர்கள் விவரம் வெளியாகி உள்ளது. ஹர்த்திக் பாண்ட்யா, ரஷித்கான், இஷான் கி‌ஷன் ஆகியோரை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுகிறார். இரு புதிய அணிகளும் வருகிற 15-ந் தேதிக்குள் தேர்வு செய்த வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.