“அட என்னப்பா நீ..சீக்கிரம் ஆடுப்பா” - கே.எல். ராகுலின் செயலால் அதிருப்தியடைந்து எச்சரித்த நடுவர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் கேஎல் ராகுலின் செயலால் அதிருப்தியடைந்த நடுவர் அவரை எச்சரித்தார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது.
இந்த போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி ஆடாததால் கே.எல்.ராகுல் கேப்டனாக பொறுபேற்றார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
தொடக்க வீரர் மயங்க் அகர்வால் நன்றாக தொடங்கி 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆடிய சீனியர் வீரர்களான புஜாரா (3) மற்றும் ரஹானே (0) ஆகிய இருவருமே சொதப்பினர்.
அதன்பின்னர் 4வது விக்கெட்டுக்கு ராகுலுடன் ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆனால் கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றத்தவறி 20 ரன்களுக்கு விஹாரி ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய கே.எல். ராகுல் அரைசதம் அடித்தார். ஆனால் அதன்பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ரிஷப் பண்ட்டும் அஷ்வினும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர். முதல் நாள் ஆட்டத்தின் டீ பிரேக் வரை 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் அடித்துள்ளது இந்திய அணி.
இந்திய அணியின் இன்னிங்ஸின் 5வது ஓவரை ரபாடா வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தை வீச ரபாடா ஓடிவர, பந்துவீசப்போகும் நேரத்தில் பந்தை எதிர்கொள்ளாமல், தான் இன்னும் தயாராக இருக்கவில்லை என்று கூறி ஒதுங்கினார் ராகுல்.
பந்துவீசப்போகும் நேரத்தில் ராகுல் ஒதுங்கியதால், பந்துவீசாமல் கஷ்டப்பட்டு நிறுத்தினார் ரபாடா. இது ஒரு ஃபாஸ்ட் பவுலருக்கு கடினமான விஷயம்.
இதையடுத்து, “சீக்கிரம் பேட்டிங்கிற்கு தயாராகுங்கள் ராகுல்” என்று நடுவர் எராஸ்மஸ் ராகுலிடம் கூறினார்.
அது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. உடனடியாக, சாரி என்று மன்னிப்பு கேட்டார் ராகுல். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.