பேட்டிங், பவுலிங்கில் கோட்டை விட்ட கோலி &கோ - ஈசியாக ஜெயித்த கொல்கத்தா
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
அபுதாபியில் உள்ள ஷேக் சையது மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அந்த அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொல்கத்தா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 19 ஓவரில் பெங்களூரு அணி 92 ரன்கள் மட்டுமே ஆல்-அவுட்டானது.
கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி மற்றும் ஆண்ட்ரே ரஸல் தலா 3 விக்கெட்டுகளையும், லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பெங்களூரு பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. அந்த அணி வீரர்கள் சுப்மன் கில் 48 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 41 ரன்களும் விளாச 10 ஓவர்களில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.