மோசமாக ஆடிய ராஜஸ்தான் அணி - மாஸ்ஸாக வெற்றி பெற்ற கொல்கத்தா அணி
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளது.
சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற 54வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் சுப்மன் கில் 56 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 38 ரன்களும் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 171 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து சென்றனர். சென்னை அணிக்கு எதிராக அசுர ஆட்டம் ஆடிய ராஜஸ்தானோ கொல்கத்தாவின் பெட்டி பாம்பாக பதுங்கியது தான் மிச்சம்.
அந்த அணியில் ராகுல் திவாடியா (44) மற்றும் ஷிவம் துபே (18) ஆகியோரை தவிர மற்றவர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டவில்லை. இதனால் 16.1 ஓவரில் 85 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 86 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சை பொறுத்தவரை அந்த அணி வீரர் ஷிவம் மாவி அதிகப்பட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.