சென்னை அணியால் 1098 மரங்களை நட்டுள்ளோம் - புகைப்படத்துடன் கிண்டல் செய்யும் KKR
சென்னை அணிக்கு எதிராக 61 டாட் பந்துகளை வீசியதை கிண்டல் செய்யும் வகையில் KKR புகைப்படம் வெளியிட்டுள்ளது.
படுதோல்வியடைந்த CSK
கடந்த வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது.
இந்த போட்டியில், சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 103 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
அடுத்து ஆடிய கொல்கத்தா அணி, 10.1 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 107 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் படு மோசமாக அமைந்தது. இந்த போட்டியில் சென்னை அணி, ஒரே சிக்ஸ் மட்டுமே அடித்தது. மேலும், 7 வீரர்கள் 5க்கும் குறைவான ரன்களையே எடுத்தனர்.
அதிக டாட் பந்துகளை சந்தித்த அணி
இதில், 61 பந்துகளில் ஏறக்குறைய 10 ஓவர்கள் ஒரு ரன் கூட சென்னை அணி எடுக்கவில்லை.
கடந்த சில சீசன்களாக பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காத வகையில், பவுலர்கள் டாட் பந்துகள் வீசினால் அதற்கு மரம் நடும் சூழல் பாதுகாப்பு சார்ந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2025 ஐபிஎல் தொடரில், 245 டாட் பந்துகளை சந்தித்துள்ள சென்னை அணி, அதிக டாட் பந்துகளை சந்தித்த அணி என்ற மோசமான பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
KKR கிண்டல்
இந்நிலையில் சென்னை அணிக்கு எதிராக 61 பந்துகளை வீசியதை கொண்டாடும் வகையில், 1098 மரங்களை நட உள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
61 dots bowled, 1098 trees planted 💜 pic.twitter.com/US2pPrl0Ls
— KolkataKnightRiders (@KKRiders) April 13, 2025
அந்த புகைப்படத்தில் கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், மொயீன் அலி, ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கனவே சேப்பாக்கம் மைதானம் முழுவதும் மரம் வளர்ந்து உள்ளது போன்று, AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் கிண்டல் செய்து வரும் நிலையில், தற்போது KKR அணியும் தன் பங்கிற்கு கிண்டல் செய்துள்ளது.
10 முறை இறுதிப்போட்டிக்கு சென்று அதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை அணி, இந்த ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில், 5 தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சென்னை அணி மீதமுள்ள 8 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.