முன்னாள் சாம்பியனுக்கே இந்த நிலைமையா? - ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு ஏற்பட்ட சோகம்
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணி பரிதாபமாக தோற்றது.
புனேவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 14வது லீக் ஆட்டத்தில் மும்பை - கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகப்பட்சமாக சூர்யகுமார் யாதவ் 52, திலக் வர்மா 38, டெவால்ட் பிரிவிஸ் 29 ரன்கள் எடுக்க மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. பேட் கம்மின்ஸ் அதிகப்பட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் 50 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தார். கடைசி கட்டத்தில் களம் கண்ட பேட் கம்மின்ஸ் மும்பை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். சிக்சர் பவுண்டரிகளாக பறந்த அவரது பேட்டிங் 16 வது ஓவரில் கம்மின்ஸ் தனியொருவராக 35 ரன்கள் குவித்து 14 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
இறுதியாக கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. பேட் கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேசமயம் முன்னாள் சாம்பியனான மும்பை அணி தொடர்ந்து விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.