ஆபாச பேச்சு - கிஷோர் கே.சாமி குண்டர் சட்டத்தில் கைது!
சமூகவலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த கிஷோர் கே. சாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வின் ஆதரவாளரான கிஷோர் கே.சாமி சமூகவலைதளங்களில் அவதூறான கருத்துகளை பதிவு செய்து பரபரப்பாக பேசப்பட்டவர். தி.மு.க. கட்சி மீதும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி இழிவான கருத்துக்களை பதிவு செய்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்தார்.
இது தொடர்பாக சங்கர்நகர் போலீசார் கிஷோர் கே.சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பெண் பத்திரிகையாளர் பற்றி ஆபாச கருத்துக்களை வெளியிட்ட புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கிஷோர் கே.சாமியை 2-வது முறையாக கைது செய்தனர்.
இந்த நிலையில் நடிகை ரோகிணி உள்பட மேலும் 3 பேர் கிஷோர் கே.சாமி மீது புகார்கள் கொடுத்தனர். தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கு மிரட்டல் விடுத்ததாக பதிவான வழக்கில் 3-வது முறையாக கிஷோர் கே.சாமி நேற்று கைது செய்யப்பட்டடு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தலைவர்கள், பத்திரிகை நிருபர்கள் பற்றி சமூகவலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கிஷோர் கே.சாமி மீது இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கிஷோர் கே.சாமி மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.