கிரண் பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?
புதுச்சேரி ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு கிரண் பேடிக்கும் புதுச்சேரி அரசுக்கும் மோதல் போக்கே நிலவி வந்தது. அரசாங்கத்தின் அன்றாட பணிகளில் ஆளுநர் தலையிடுவதாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி வந்தார். இந்நிலையில், சட்டசபை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற சூழலில், பதவி காலம் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே, கவர்னர் பதவியில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டுள்ளார். இதற்கான பின்னணி காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.கவர்னராக பொறுப்பேற்ற கிரண்பேடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டபோதும், அரசு நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். ராஜ் நிவாசில் ஒப்புதல் அளிக்கப்படும் கோப்புகள் குறித்த விபரங்களை ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்தார். இருந்தபோதும், மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் விடாப்பிடியாக முட்டுக்கட்டை போட்டதால், கவர்னரின் செயல்பாடுகள் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதனால், கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாகவும், தேர்தலில் பா.ஜ.,வின் வெற்றிவாய்ப்பை பாதிக்கும் எனவும், புதுச்சேரி பா.ஜ.,வினர் கட்சி தலைமையிடம் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.அவரை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். காரைக்காலில் உள்ள திருநள்ளார் கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்திப் பெற்றதாகும்.
இதில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த சனி பெயர்ச்சி விழாவுக்கு, கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை கவர்னர் கிரண்பேடி விதித்தார். இது, பக்தர்கள் மத்தியில் வேதனையையும், கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.காரைக்கால் பகுதியில் கவர்னரை கண்டித்து போராட்டம் வெடித்தது. இந்த விவகாரத்தை மேலிடத்தின் கவனத்துக்கு பா.ஜ.,வினர் கொண்டு சென்றனர்.
இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் புகார் செய்தனர். இதற்கிடையில், திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததை சுட்டிக் காட்டி, ஹெல்மெட் அணிவதை உடனடியாகவும், கண்டிப்பாகவும் அமல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டார். திருத்தப்பட்ட சட்டத்தின் படி உயர்த்தப்பட்ட அபராத தொகையும் மக்களிடம் வசூலிக்கப்பட்டது.
அவகாசம் தராமல் அபராதம் விதிப்பதாகவும், உச்சக்கட்டமாக கெடுபிடி செய்வதாகவும் பொதுமக்கள் எரிச்சல் அடைந்தனர்.
இதுபோன்ற கெடிபிடிகள், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பா.ஜ.,வுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என அக்கட்சியினர் தங்களின் கவலையை மேலிடத்தில் பதிவு செய்தனர். இதன் பின்னணியில் கவர்னர் பதவியில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டு, உத்தரவு வெளியாகி உள்ளது.